இறைவர் : அருள்மிகு வேதகிரிஸ்வரர்
இறைவி :அருள்மிகு திரிபுரசுந்தரி அம்மன்
இறைவர் : அருள்மிகு பக்தவச்சலேஸ்வரர் (தாழக்கோவில்)
தல மரம் : வாழை மரம் (கதலி)
தீர்த்தம் : சங்குத் தீர்த்தம்
திருமால் உபேந்திர பதவியில் இருக்கும் போது தேவர்கள் அவரிடம் வந்து அரக்கர்கள் தங்களை துன்புருத்துவதினின்றும் காக்குமாறு வேண்டினர். திருமால் அவர்கள் வேண்டுகோளுக்கினங்கி அவுனர்களை கொல்வதற்குச் சென்றனர். அவுனர்கள் பயந்து ஓடி வனத்தில் புகுந்தனர். வனத்தில் இருந்த பிருகு முனிவரின் ஆசிரமத்தை அடைந்து பிருகு பத்தினியிடம் தங்களை காக்குமாறு வேண்டினர். அவ்வம்மையார் அவர்களை ஆசிரமத்தில் ஒளித்து வைத்து வாயிற்படியில் ஒரு சட்டுவத்துடன் நின்றனர். அரக்கர்களை தேடி வந்த திருமால் பிருகு முனிவரின் மனைவியை நோக்கி அரக்கர்கள் உங்கள் ஆசிரமத்தில் இருக்கிறார்கள் வழிவிடுங்கள் என்றார். அவ்வம்மையார் அடைக்கலமாக வந்தவர்களை விடுவது அறமன்று என்றார். திருமால் அறிவுள்ள பிருகு பத்தினியே! நீ அரக்கர்களை விடாமல் தடுத்தனை எனக் கோபித்து அவ்வனம் முழுவதும் தீயில் முழுகும் படி சக்கரத்தை ஏவினார். அந்த சக்கரம் அந்த காடும், அரக்கர்க்ளும் பிருகு முனிவரின் பத்தினியும் வேகும்படி கோபதத்துடன் சுட்டது. சிவப்பெருமானால் முப்புரத்தவர்கள் இறந்தது போல் அவ்வரக்கர்களும் முனிவரின் மனைவியும் அழிந்தார்கள். அவ்வமயம் பிருகு முனிவர் அங்கு வந்தார். தன் மனைவியும் பெரிய வனமும் அழிந்தது. திருமால் ஏவிய சக்கரப்படையால் என்றறிந்து, தன் மனைவியிடத்து வைத்து அன்பினால் மனம் வாடினார். இத் திருமால் திருமகளை விரும்பிய காதலையுடையவன். பின் வருவதையறிகிலன், பெண் கொலையையும் கருதவில்லை. அடைக்கலமாக வந்தவர்களை காப்பது அறமாகும். இச்செயலைச் செய்த என் மனைவியைக் கொன்றது அறமாகுமோ எனத் திருமாலை நோக்கி நீ சக்கரமேந்தியது அனைவரையும் காப்பதற்காகும். தேவர்களுக்கு நன்மையும் மேன்மையும் செய்யும் தவத்தினரைக் கொல்வதற்கன்று. என் மனைவியைக் கொன்று துன்பத்தினை விளைவித்த நீ எடுக்கும் பத்துப் பிறவியில் ஊரையும் விட்டு, அறிவுமயங்கி உயிர்வனத்திற்குபோய் மனைவியைப் பிரிந்து நீயும் தவிக்கக்கடவை எனச் சாபமிட்டார். திருமால் பிருகு முனிவரை நோக்கி உமது மனைவியை இப்போது எழுப்பித் தருகிறேன். என் குற்றத்தைப் பொறுத்தருள வேண்டும் என்று அவர் மனைவியை கொன்ற சக்கரத்தை எதிரில் வைத்து, தன் கால் பெரிய விரலைப் பூமியில் ஊன்றினர். ஊன்றிய இடத்தில் குளிர்ந்த நீருண்டாகியது. அந்த நீரைப் பிருகு முனிவரின் மனைவின் எலும்புகூடு மீது தெளித்தார். தெளித்தவுடன் அவள் உயிர் பெற்றெழுந்தாள். பிருகு முனிவர் மகிழ்ந்து பலவாறு புகழ்ந்து இந்த நாளில் நானிட்ட சாபப்படி அந்த நாளில் தேவர்களுக்கு உதவியாய் நீ செல்லுங் கானகத்தில் உன் மனைவியை பிரிவாய் .பிறகு நீ அரக்கர்களை கொன்று உன் மனைவியை அடைவாய். நீ முனி பத்தினியை கொன்ற பாவம் நீங்க வேதகிரியை அடைந்து பூசிப்பாயாக எனக் கூறினார். பிறகு திருமால் வேதகிரியை அடைந்து திருமஞ்சன நீர் திருப்பள்ளித்தாமம் முதலியவற்றைக் கொண்டு வேத நெறிப்படி பூசனை செய்து வேதகிரீசன் திருவருளை பெற்று தம்பதம் சென்றார். திருமால் அதற்கு முன்னும் திரிபுரத்தில் இருந்த அவுனர்கள் செய்யும் சிவ பூசை வழுவும் படி செய்த மாயத்தால் விளைந்த பாதகம் தொலையும் படியும் பிறகு கிருட்டினனாகப் பிறந்த போது மாமனைக் கொன்று பாதகமும் தொலைய வேதகிரி வந்து பூசித்து தொழுது சென்றார். நாராயணன் வழிபட்டதால் இத்தலத்திற்கு "நாராயணபுரி" எனும் பெயருண்டாகியது.