கி.பி. ஏழாம் நூற்றாண்டில், சீர்காழி என்னும் ஊரில் பிறந்தார். இவரது தந்தையார் சிவபாதவிருதயர், தாயார் பகவதி அம்மையார். நிறைந்து ஆராத அன்பினுடன் திருவிடைசுர நாதரின் அருள் பெற்று செந்துருத்தி எனும் புன்னை பாடும் வண்டினங்கள் உறையும் சாரல்களுடைய கழுகுன்றினை அடைந்தார். அவ்வாறு அடையும் போது திருக்கழுக்குன்றத்தில் உள்ள திருதொன்டர்கள் எதிர் கொண்டு வணங்கினர். திருக்கழுக்குன்ற தொண்டருடன் தம் தொண்டர்கள் புடை சூழ மணங்கமழும் சோலைகள் சூழ்ந்த திருமலையை வளம் வந்து ஒளியைஉடைய திருக்கழுக்குன்றத்தில் அமர்ந்து செம்பொன் மாயமான ஒப்புயர்வற்ற குன்று போன்ற இறைவரை மிகுந்த அன்பு பெருக்கினால் பணிந்தெழுந்து தமக்கு ஞானபாலுட்டிய ஞான்று தாம் துதித்த ஓங்கார ஒலியுடைய தோடு எனும் சொல்லினை நினைவு கூர்வார் போல் இறைவன் அம்மை அப்பனாக விளங்கி மிகவும் அன்பு கொண்டு உறையும் இடம் திருக்கழுக்குன்றே என்று வலியுறுத்தும் தமிழ் மாலை பாடினார். திருஞானசம்மந்தர் வேதகிரி பெருமானை கண்டு தரிசித்து ஒரு காதில் தோடு உடையவன் மற்றொரு காதில் தூய குழையுடையவன் என்று உமையோடு பாகவனாகத் துதித்து இறைவன் மிக்க அன்பு கொள்ளும் இடம் கழுக்குன்றே என்று பாடியுள்ளார்.
பாடல் எண் : 1(1112)
தோடுடையானொரு காதிற்றூய குழைதாழ ஏடுடையான் றலைகலனாக விரந்துண்ணும் நாடுடையா னள்ளிருளேம நடமாடும் காடுடையான் காதல்செய்கோயில் கழுக்குன்றே...
பாடல் எண் : 2
கேணவல்லான் கேழல்வெண்கொம்பு குறளாமை பூணவல்லான் புரிசடைமேலொர் புனல்கொன்றை பேணவல்லான் பெண்மகள்தன்னை யொருபாகம் காணவல்லான் காதல்செய்கோயில் கழுக்குன்றே...
பாடல் எண் : 3
தேனகத்தார் வண்டதுவுண்ட திகழ்கொன்றை தானகத்தார் தண்மதிசூடித் தலைமேலோர் வானகத்தார் வையகத்தார்கள் தொழுதேத்தும் கானகத்தான் காதல்செய்கோயில் கழுக்குன்றே...
பாடல் எண் : 4
துணையல்செய்தான் றூயவண்டியாழ்செய் சுடர்க்கொன்றை பிணையல்செய்தான் பெண்ணினல்லாளை யொருபாகம் இணையல்செய்யா விலங்கெயின்மூன்று மெரியுண்ணக் கணையல்செய்தான் காதல்செய்கோயில் கழுக்குன்றே...
பாடல் எண் : 5
பையுடைய பாம்பொடுநீறு பயில்கின்ற மெய்யுடையான் வெண்பிறைசூடி விரிகொன்றை மையுடைய மாமிடற்றண்ணன் மறிசேர்ந்த கையுடையான் காதல்செய்கோயில் கழுக்குன்றே...
பாடல் எண் : 6
வெள்ளமெல்லாம் விரிசடைமேலோர் விரிகொன்றை கொள்ளவல்லான் குரைகழலேத்துஞ் சிறுத்தொண்டர் உள்ளமெல்லா முள்கிநின்றாங்கே யுடனாடும் கள்ளம்வல்லான் காதல்செய்கோயில் கழுக்குன்றே...
பாடல் எண் : 7
ஆதல்செய்தான் அரக்கர்தங்கோனை அருவரையின் நோதல்செய்தான் நொடிவரையின்கண் விரலூன்றிப் பேர்தல்செய்தான் பெண்மகள்தன்னோ டொருபாகங் காதல்செய்தான் காதல்செய்கோயில் கழுக்குன்றே...
பாடல் எண் : 8
இடந்தபெம்மான் ஏனமதாயும் அனமாயுந் தொடர்ந்தபெம்மான் தூமதிசூடி வரையார்தம் மடந்தைபெம்மான் வார்கழலோச்சிக் காலனைக் கடந்தபெம்மான் காதல்செய்கோயில் கழுக்குன்றே...
பாடல் எண் : 9
தேயநின்றான் றிரிபுரங்கங்கை சடைமேலே பாயநின்றான் பலர்புகழ்ந்தேத்த வுலகெல்லாம் சாயநின்றான் வன்சமண்குண்டர் சாக்கீயர் காயநின்றான் காதல்செய்கோயில் கழுக்குன்றே...
பாடல் எண் : 10
கண்ணுதலான் காதல்செய்கோயில் கழுக்குன்றை நண்ணியசீர் ஞானசம்பந்தன் தமிழ்மாலை பண்ணியல்பாற் பாடியபத்தும் இவைவல்லார் புண்ணியராய் விண்ணவரோடும் புகுவாரே...